இனிமையான அதிகாலை நேரம். ஒரு ஜென் துறவி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தார். உடல் இளைப்பதற்காக அல்ல, இயற்கையின் அழகைப் பார்த்து அனுபவித்து ரசிப்பதற்காக!
அவர் நடந்து செல்லும் பாதையில் ஓர் ஏரி. அங்கே சில இளைஞர்கள் வில், அம்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஆனால், அந்த இளைஞர்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் தங்களுடைய இலக்கு வட்டத்தை எட்டமுடியவில்லை. அம்பு திசைமாறிச் சென்றுகொண்டே இருந்தது. இதைப் பார்த்த ஜென் துறவி மெல்லச் சிரித்தார்.
இளைஞர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘யோவ் சாமியாரே, உனக்கு என்னா நக்கலு!’ என்று எகிறினார்கள். ‘தியானம் செய்யற உனக்கு வில், அம்பைப்பத்தி என்ன தெரியும்? இவ்ளோ தூரத்திலேர்ந்து அந்த இலக்கை அடிக்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’ என்றார்கள்.
‘அப்படியா? எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. மன்னிச்சுடுங்க’ பணிவாகச் சொன்னார் ஜென் துறவி. ‘இருந்தாலும், நான் ஒரு சின்ன முயற்சி செஞ்சு பார்க்கறேன், கொஞ்சம் அந்த வில், அம்பைக் கொடுங்களேன்!’
அந்த இளைஞர்கள் நக்கலாகச் சிரித்துக்கொண்டார்கள். ‘இந்தாள் அம்பு விடப்போறானா? சுத்தம்!’ என்று கேலி செய்தபடி அவரிடம் வில், அம்பைக் கொடுத்தார்கள்.
துறவி ராமர் கணக்காக வில்லை நிமிர்த்தி நிறுத்தினார். அம்பைப் பொருத்தி எய்தார். சரியாக அது இலக்கைத் தாக்கியது!
இளைஞர்கள் அசந்துவிட்டார்கள். ‘நீங்க பெரிய வில்வித்தை நிபுணரா இருக்கீங்களே!’ என்றார்கள்.
‘ம்ஹூம், இல்லவே இல்லை. நான் இப்பதான் முதல்தடவையா வில், அம்பைத் தொடறேன்’ என்றார் ஜென் துறவி. ‘ஆனா, என்னோட கவனம் மொத்தமும் இதைச் சரியாச் செய்யணுமே-ங்கற ஒரு விஷயத்திலதான் குவிஞ்சிருந்தது. உங்களுக்கு அப்படியில்லை, ஒழுங்கா அம்பு எய்யறதன்மூலமா கிடைக்கப்போற பரிசு, பாராட்டு, புகழ், பணம் இதைப்பத்தியெல்லாம் யோசிச்சுகிட்டே முயற்சி செஞ்சீங்க. அதனாலதான் எத்தனையோ திறமை இருந்தும் உங்களால அந்த இலக்கைத் தொடமுடியலை!’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment