’என் சொத்துகளையெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்துவிடப்போகிறேன்!’ என்றான் ஒரு பெரிய பணக்காரன்.
‘எப்போது?’ என்று கேட்டார் அவனுடைய குருநாதர்.
‘இதென்ன கேள்வி? என் காலத்துக்குப்பிறகுதான்!’ என்றான் அந்தப் பணக்காரன். ‘ஏற்கெனவே உயிலெல்லாம் எழுதிவைத்துவிட்டேன். எனக்குப்பின் இந்தச் சொத்துகள் எல்லாம் ஏழை எளிய மக்களின் நன்மைக்குப் பயன்படும்.’
‘ஓஹோ! சரி!’
’வெறும் சரிதானா? இவ்வளவு பெரிய தர்மம் செய்கிறேன். என்னை இன்னும் நாலு வார்த்தை பாராட்டக்கூடாதா?’
‘நீ பசுவாக இருந்தால் பாராட்டலாம். பன்றியாக இருக்கிறாயே!’
‘என்னது? பன்றியா? அது எப்படி?’
‘பசு உயிரோடு இருக்கும்போதே நிறையப் பாலை அள்ளித்தருகிறது. ஆனால் பன்றி, இறந்தபிறகுதான் தன்னுடைய மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறது. பசு தரும் பாலின் மதிப்பைவிடப் பன்றி இறைச்சியின் மதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரோடு இருக்கும்போதே தருவதற்கு ஒரு மனம் வேண்டுமல்லவா?’
‘உண்மைதான். எனக்கு அந்த மனம் வரவில்லையே. என்ன செய்ய?’
’நமக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை என்று நினைக்கச் சொல்கிறது ஜென். என் வீடு, என் குடும்பம், என் பணம், என் கார், என் கம்ப்யூட்டர், என் புத்தகம் என்று நாம் நினைப்பது எல்லாமே உண்மையில் வேறு யாருடையதோ. நாம் அவற்றுக்கு நிஜமான சொந்தக்காரர்கள் இல்லை, வெறும் வாடகைக்காரர்கள்தான். அவற்றைத் தாற்காலிகமாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். எந்த விநாடியிலும் அது நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிடலாம் என்பது புரிந்தால், அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கிடக்கமாட்டோம்!’
‘ஏன் இப்படிப் பயமுறுத்தறீங்க?’
‘பயமுறுத்துவது என் நோக்கம் இல்லை. சாதாரணப் பொருள்களின்மீது அளவுக்கு அதிகமான ஒட்டுதல் ஏற்படுத்திக்கொள்ளாமல் மனிதர்களோடு செலவிடும் நேரத்தை மதிக்கப் பழகு. உன்னுடைய வாழ்க்கைக் கண்ணோட்டமே மாறிவிடும்!’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment