Saturday, March 10, 2012

நூறு சட்டைகள்....!


அந்தக் காலத்தில் உதயணன் என்று ஓர் அரசன். அவனைச் சந்திப்பதற்காக ஒரு ஜென் துறவி வந்திருந்தார்.

உதயணன் முறைப்படி முனிவரை வணங்கி உபசரித்தான். ‘ஐயா, தங்களுக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்குங்கள்’ என்றான். ‘உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் கேளுங்கள். உடனே தருகிறேன்!’

அரசன் இப்படிக் கேட்டதும் அந்தத் துறவி ஒரு நிமிடம்கூட யோசிக்கவில்லை. ‘எனக்கு நூறு சட்டைகள் வேண்டும்’ என்றார்.

அரசனுக்கு ஆச்சர்யம். அதை மறைத்துக்கொண்டு ’முனிவர் பெருமானே, நீங்கள் கேட்டபடி நூறு சட்டைகளைத் தருவதற்கு உடனே ஏற்பாடு செய்கிறேன்’ என்றான். ’ஆனால், என்னுடைய ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைப்பீர்களா?’

‘என்ன சந்தேகம்? தயங்காமல் சொல்லப்பா!’

‘நீங்களோ துறவி. உங்களுக்கு எதற்கு நூறு சட்டைகள்?’

முனிவர் சிரித்தார். ‘இவையெல்லாம் எனக்கில்லை. என்னுடைய ஆசிரமத்தில் இருக்கும் சீடர்களுக்காக!’

‘அப்படியானால் அவர்களுடைய பழைய சட்டைகளை என்ன செய்வீர்கள்?’

‘அவற்றைக் கிழித்துத் தைத்துப் படுக்கை விரிப்புகளாக மாற்றிவிடுவோம்!’

‘அப்படியானால் அந்தப் பழைய படுக்கை விரிப்புகளை என்ன செய்வீர்கள்?’

‘அவற்றைக் கிழித்துத் தைத்துத் தரை துடைக்கப் பயன்படுத்திக்கொள்வோம்!’

‘அப்படியானால் அந்தப் பழைய தரை துடைக்கும் துணிகளை என்ன செய்வீர்கள்?’

‘அவற்றை அரைத்துச் சேற்றோடு கலந்து சுவற்றில் பூசுவோம். அவை எங்களுடைய ஆசிரமச் சுவர்களுக்குப் பலம் தரும்!’

அரசன் உதயணன் முனிவருடைய கால்களில் விழுந்தான். ‘இந்தப் பூமியில் எதுவுமே வீணாவதில்லை, எல்லாமே பயனுடையதுதான் என்கிற பெரிய தத்துவத்தை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். நன்றி ஐயா’ என்றான்.

ஜென் துறவி மெல்லமாகச் சிரித்தார். ‘நமக்கு உரிமையானது என்று இந்த மண்ணில் எதுவுமே இல்லை அரசனே, எல்லாமே தாற்காலிகமாக நாம் வைத்திருக்க, பயன்படுத்தத் தரப்படுவதுதான். இதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உன்னை எந்தத் துயரமும் பாதிக்காது!’ என்று ஆசி வழங்கினார்.

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment