அன்றைக்குப் புத்த பூர்ணிமா. அந்த ஆசிரமம் எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு ஜென் துறவி தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் பான்கேய்.
அப்போது அந்த ஆசிரமத்துக்கு ஒரு பெண்மணி வந்தார். அவருடைய முகத்தில் பெரும் கவலை. அந்தத் துறவி தியானம் கலைந்து எழுகிறவரையில் பொறுமையாகக் காத்திருந்து வணங்கினார். தன்னுடைய பிரச்னையைச் சொன்னார். ‘எனக்கு நிறைய கோவம் வருது சாமி. நான் என்ன செய்யறது?’
‘கோவமா? அது எப்படி இருக்கும்?’ என்றார் அந்தத் துறவி. ‘நான் அந்தக் கோவத்தைப் பார்க்கணுமே. கொஞ்சம் காட்டுங்க!’
‘இப்பவா?’
‘ஆமாம்!’ என்றார் துறவி பான்கேய். ‘உங்ககிட்டதான் நிறைய கோவம் இருக்கு-ன்னு சொன்னீங்களே. அதுல கொஞ்சத்தை எடுத்துக் காட்டுங்க. நான் பார்க்கறேன்!’
’அதெப்படி சாமி முடியும்? இப்ப எனக்குக் கோவம் வரலையே!’
‘சரி. இனி எப்போ உங்களுக்குக் கோவம் வருதோ, அப்போ என்கிட்டே ஓடி வாங்க. கோவத்தைக் காட்டுங்க!’
’அதுவும் முடியாது சாமி’ என்றார் அவர். ‘இங்கே வர்றதுக்குள்ள அந்தக் கோவம் கரைஞ்சு காணாமபோயிடுமே!’
‘ஆக, நான் கேட்கும்போதெல்லாம் உங்களால அதைக் காட்டமுடியாது. அதுவா வந்தாலும் ரொம்ப நேரம் தங்காது. அப்டீன்னா என்ன அர்த்தம்?’ என்றார் பான்கேய். ‘கோவப்படறது உங்க இயல்பு இல்லை, இந்தக் கோவம் உங்களுக்குச் சொந்தமானது இல்லை. வேற யாரோ எதுவோதான் அதை உங்கமேல சுமத்தறாங்க. நீங்க ஏன் ஏன் அதை ஏத்துக்கறீங்க? முடியாதுன்னு மறுத்துடுங்க. அது உங்க கையிலதான் இருக்கு. இந்த விஷயத்தில வேற யாரும் உங்களுக்கு உதவமுடியாது’ என்றவர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
#படித்ததில் குழப்பியது...
No comments:
Post a Comment