இரண்டு பேர் குடிக்கச் சென்றார்கள். ஒருவன் அளவாகக் குடித்தான். இன்னொருவன் நிறையக் குடித்து மட்டையாகிவிட்டான்.
முதல் ஆள் யோசித்தான். ‘இப்போ என்ன செய்யறது? நான் வீட்டுக்குக் கிளம்பணும். இவனைக் கூடவே கூட்டிகிட்டுப் போனா என் பொண்டாட்டி பிச்சுப்புடுவா!’
அவனுக்குத் தன்னுடைய நண்பனைச் சும்மா விட்டுச் செல்லவும் மனம் இல்லை. அவனுடைய பாக்கெட்டில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்தான். ‘போதை தெளிஞ்சு எழுந்ததும் அவன் ஆட்டோவோ டாக்ஸியோ பிடிச்சு வீட்டுக்குப் போகட்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
அரை மணி நேரம் கழித்து அந்த இன்னொருவன் விழித்தெழுந்தான். தட்டுத்தடுமாறி வெளியே வந்தான். தன்னுடைய வீடு இருக்கும் திசையில் நடந்தான்.
மறுநாள் முதல் ஆள் அவனுக்கு ஃபோன் செய்தான். ‘என்னப்பா? ராத்திரி ஒழுங்கா வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தியா?’
‘அடப் போய்யா. அஞ்சு கிலோமீட்டர் நடந்து வீட்டுக்கு வர்றதுக்குள்ள ஏழெட்டு இடத்தில கீழே வுழுந்து உடம்பெல்லாம் அடி பட்டுகிட்டேன். இப்ப ஆஸ்பத்திரியில கிடக்கறேன்!’
‘அச்சச்சோ. ஃபுல் போதையில நீ ஏன் நடந்து வீட்டுக்கு வந்தே? ஒரு ஆட்டோவைப் பிடிக்கவேண்டியதுதானே?’
‘ஆட்டோவுக்குக் காசு? நான்தான் எல்லாப் பணத்தையும் குடிச்சுத் தீர்த்துட்டேனே!’
‘அடப் படுபாவி. உன் பாக்கெட்ல நான் ஒரு நூறு ரூபாய் நோட்டு வெச்சிருந்தேனே. அதைக் கவனிக்கலையா?’ என்றான் முதல் ஆள். ‘கையில காசை வெச்சுகிட்டே இப்படி நடந்து வந்து அடிபட்டுகிட்டியே, உன்னை என்ன செய்யறது?’
முதல் நண்பன் இரண்டாவது நண்பன் பாக்கெட்டில் காசை வைத்து என்ன பிரயோஜனம்? அவனிடம் பணம் இருக்கிறது என்று அவனுக்கே தெரியாதவரை அவன் ஏழைதான்!
‘அந்தக் குடிகாரனைப்போலதான் நம்மில் பலர் வாழ்க்கையைச் சிரமத்தோடு அனுபவிக்கிறோம்’ என்கிறது ஜென் பௌத்தம்.
‘நமக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான சொத்தைப் புரிந்துகொள்ளாமலே வாழ்ந்து முடித்துவிடுவது எப்பேர்ப்பட்ட சோகம்!’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment