ஜென் குரு ஒருவர். அவருக்கு நான்கு மாணவர்கள்.
அன்றைக்கு அவர் தன்னுடைய வகுப்புக்கு வரும்போது கையில் எதையோ கொண்டுவந்தார். மாணவர்கள் முன்பாக அதை மேஜைமீது வைத்தார். அவர்களைப் பார்த்து மெல்லமாகச் சிரித்தார்.
குருவின் கையில் இருந்த அந்தப் பொருள், ஒரு சாதாரணக் கூழாங்கல்!
மாணவர்கள் யோசித்தார்கள். ‘குருநாதர் மெனக்கெட்டு இந்தக் கல்லைத் தூக்கிட்டு வர்றார்ன்னா அதுல ஏதோ விஷயம் இருக்கணும். இந்தக் கூழாங்கல்லை வெச்சு அவர் நமக்கு ஏதோ பாடம் சொல்லித்தர முயற்சி செய்யறார்!’
இப்படி நினைத்த சீடர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள். ‘ஒருகாலத்தில் இந்தக் கல் நன்கு கரடுமுரடாக இருந்தது. பின்னர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முரட்டுத்தன்மையை இழந்து மென்மையடைந்து இப்படி அழகாக மாறியிருக்கிறது’ என்றார் ஒருவர். ‘அதுபோல, நாமும் நம் வாழ்க்கையில் தவறுகளைக் குறைத்துக்கொண்டால் மேன்மை அடைவோம்’ என்று முடித்தார் இன்னொருவர்.
‘ஒரு கூழாங்கல் நதியின் போக்கில் உருண்டு செல்கிறது. எதிர்த்து முரண்டு பிடிப்பதில்லை. அந்தப் பயணத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறது. அதுதானே மிகச் சிறந்த ஜென் தத்துவம்?’ என்றார் மூன்றாவது சீடர்.
நான்காவது சீடர்மட்டும் எதுவும் பேசவில்லை. மௌனமாக அந்தக் கல்லைப் பார்த்து அதன் அழகை, நேர்த்தியை வியந்துகொண்டிருந்தார். நெடுநேரம் கழித்து ஒரே ஒரு புன்னகைமட்டும் அவரது உதடுகளில் மலர்ந்தது.
குருநாதர் அந்த நான்காவது சீடரைத் தட்டிக்கொடுத்தார்.
மற்ற சீடர்களைப் பார்த்துச் சொன்னார். ‘இயற்கையை வர்ணிப்பதோ, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதோ இரண்டாம்பட்சம்தான். அதை அனுபவித்து உணர்ந்து ரசிக்கமுடியாவிட்டால் இவையெல்லாம் வெற்றுப் பேச்சுகளாகிவிடும், ஜாக்கிரதை!’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment