அவர் ஒரு ஜென் துறவி. தினமும் சில மணி நேரங்களாவது அமைதியாகத் தியானம் செய்வது அவருடைய பழக்கம்.
ஆனால் அவர் அப்படித் தியானத்தில் உட்காரும்போதெல்லாம் யாராவது அவரிடம் பேசுவதற்காக வருவார்கள். அல்லது அக்கம்பக்கத்து வீடுகளில் ஏதாவது சத்தம் எழும். அவருடைய தியானம் கலைந்துவிடும்.
வெறுத்துப்போன துறவி தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டார். ‘நான் நிம்மதியாத் தியானம் செய்யணும். அதுக்கு ஒரு நல்ல இடமாச் சொல்லுங்க!’
நண்பர்களில் ஒருவர் சொன்னார், ‘நம்ம ஊர் ஏரி ரொம்பப் பெருசு. நீங்க ஒரு படகுல ஏறிக்கிட்டு அந்த ஏரியோட நடுப்பகுதிக்குப் போயிடுங்க. அங்கே ஒரு பய வரமாட்டான். நீங்க எந்தத் தொந்தரவும் இல்லாம பல மணி நேரம் தியானம் செய்யலாம்!’
துறவிக்கு இந்த யோசனை முயன்று பிடித்திருந்தது. உடனடியாக அதை முயன்று பார்க்கத் தீர்மானித்தார்.
மறுநாள் அதிகாலை நேரம். துறவி ஒரு படகில் ஏறிக்கொண்டார். மெல்லத் துடுப்புப் போட்டு ஏரியின் மையப்பகுதியை அடைந்தார். படகை மிதக்கவிட்டுத் தியானத்தில் அமர்ந்தார். ’ஆஹா! அற்புதமான அமைதி. தண்ணீரின் சலசலப்புச் சத்தம்கூட இல்லை. இங்கே நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்!’
துறவி இப்படிப் பரவசத்தோடு நினைத்துக்கொண்டிருந்தபோது யாரோ அவருடைய படகின்மீது முட்டினார்கள். தியானம் கலைந்த அவர் கோபமாகக் கத்தினார். ‘யாருய்யா அது? அறிவிருக்கா? நான்பாட்டுக்கு அமைதியா உட்கார்ந்துகிட்டிருக்கேன், என்மேல வந்து இடிக்கிறியே, உனக்குப் புத்தி கித்தி கெட்டுப்போச்சா?’
அவர் எவ்வளவு கத்தினாலும் அந்தப் படகிலிருந்து பதில் வரவில்லை. எட்டிப் பார்த்தால் அது காலிப் படகு. எப்படியோ காற்றில் போக்கில் மிதந்துவந்து அவருடைய படகின்மீது மோதியிருக்கிறது.
அந்த ஜென் துறவி யோசித்தார். ‘என்னோட கோவத்தை அந்தக் காலிப் படகுமேலே காட்டி என்ன புண்ணியம்?’
அதன்பிறகு, அந்த ஜென் துறவிக்கு எதன்மீதும், யார்மீதும் கோபமே வருவதில்லை. யாராவது அவரைப்பற்றித் தவறாகப் பேசினாலோ, கெட்டது நினைத்தாலோகூட. ‘பாவம், அது காலிப் படகு!’ என்று எண்ணிக்கொண்டு விலகிச் சென்றுவிடப் பழகிக்கொண்டார்!
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment