Tuesday, January 31, 2012

ஆயுதம் எதுக்கு?


போகுதென் என்கிற ஒரு சாமுராய். பெரிய வீரர். ஜென் கற்றவர். ஆனால் ஒருபோதும் தன்னுடைய திறமைகளைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமாட்டார். அமைதியான பேர்வழி.

ஒருநாள் போகுதென் படகில் சென்றுகொண்டிருந்தார். அவரோடு இன்னும் ஏழெட்டுப்பேர் அதே படகில் பயணம் செய்தார்கள்.

சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான். ’நான் பெரிய போர்வீரன். தெரியுமா?’

யாரும் பதில் சொல்லவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரேலென்று எழுத்து நின்றான். வாளை உறுவினான். சுழற்றினான். ’இங்க எவனுக்காச்சும் தைரியம் இருத்தா என்னோட ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா. பார்த்துடலாம்.’

இப்போதும் அவர்கள் வாய் திறக்கவில்லை. ஆத்திரத்தில் அவன் இன்னும் அசிங்கமாகக் கத்தினான். ஆவேசமாகக் குதித்தான்.

கடைசியாக போகுதென் பேசினார். ’தம்பி, கொஞ்சம் அமைதியா உட்காருப்பா. நீ இப்படிக் குதிக்கறதால படகு கண்டபடி ஆடுது. அது கவிழ்ந்துட்டா நம்ம எல்லாரோட உயிருக்கும் ஆபத்து.’

அவன் சட்டென்று போகுதெனைப் பிடித்துக்கொண்டான். ’உனக்கு அவ்வளவு அக்கறைன்னா நீ என்னோட சண்டைக்கு வா!’ என்று சவால் விட்டான்.

’சரி’ என்று ஒப்புக்கொண்டார் போகுதென். ’ஆனா இங்கே சண்டை போட்டா மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே!’

’அதனால?’

’அதோ, அங்கே ஆத்துக்கு நடுவில ஒரு தீவு இருக்கு. நீயும் நானும் அங்கே போய்ச் சண்டை போடலாம்.’

’சரி.’

போகுதென் துடுப்பை எடுத்துக்கொண்டார். அந்தத் தீவை நோக்கிப் படகைச் செலுத்தினார்.

சில நிமிடங்களில் படகு தீவுக்கரையைத் தொட்டது. அந்த வீரன் உருவிய வாளோடு கீழே குதித்தான்.

மறுவிநாடி போகுதென் படகை எதிர்த் திசையில் செலுத்த ஆரம்பித்தார். அந்த வம்புச்சண்டைக்காரனைத் தீவில் தனியாகப் புலம்பவிட்டுவிட்டுப் படகு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.

படகில் இருந்த மற்றவர்கள் போகுதெனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ’ஐயா, நீங்க பெரிய சாமுராயாச்சே. கத்தியை உருவி ஒரே சீவுல அவன் கதையை முடிச்சிருக்கலாமே!’

’உண்மைதான்’ என்றார் போகுதென். ’ஆனா வாளை உருவாமலே சண்டையில ஜெயிக்கலாம்ங்கறப்போ அநாவசியமா ஆயுதமெல்லாம் எதுக்கு?’

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment