ஜென் சிந்தனையாளர் ஒருவருடைய வீடு. அங்கே நான்கைந்து மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள்.
தினந்தோறும் ராத்திரிச் சாப்பாடு முடிந்தவுடன் அவர்களுக்கு ஒரு ஸ்பூன் தேன் வழங்கப்படும். அதைக் குடித்துவிட்டுதான் கை கழுவவேண்டும்.
அன்றைக்குத் தேன் குடித்த மாணவன் ஒருவன் முகம் அஷ்டகோணலாக மாறியது. ‘த்தூ, த்தூ! ஒரே கசப்பு!’ என்றான் அவன்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு மாணவனுக்குக் கோபம். ‘உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று கத்தினான். ‘தேன் அற்புதமா இனிக்குது. அதைப்போய்க் கசப்புன்னு சொல்றியே!’
‘இல்லை. இந்தத் தேன் கசக்குது!’
‘இல்லவே இல்லை. இனிக்குது!’
அவர்கள் கைகூடக் கழுவாமல் தங்களுடைய குருநாதரிடம் ஓடினார்கள். ‘ஐயா, எங்களுக்குள்ள ஒரு சின்னச் சண்டை. நீங்கதான் தீர்த்துவைக்கணும்’ என்றார்கள்.
‘என்ன சண்டை?’
’இன்னிக்குச் சாப்பாட்டோட பரிமாறின தேன் இனிக்குதுன்னு நான் சொல்றேன். கசக்குது-ன்னு இவன் சொல்றான். எங்கள்ல யார் சொல்றது சரி?’
’ரெண்டுபேர் சொல்றதும் சரிதான்!’ என்றார் குருநாதர்.
‘அது எப்படி முடியும்? நீங்க தேனைக் குடிச்சுப் பார்க்காமலே தீர்ப்புச் சொல்றீங்களே!’
’அவனுக்குத் தேன் இனிக்கிறது. உனக்கு அது கசக்கிறது. எனக்கு அது புளிக்கலாம், அல்லது காரமாகக்கூட இருக்கலாம். அவரவர் சுவை அவரவர்க்கு’ என்று புன்னகைத்தார் குருநாதர். ‘சுவைப்பதுதான் முக்கியம். உங்கள் சுவை அடுத்தவர்களோடு ஒத்துப்போகிறதா என்பதுபற்றி யோசித்துக் கவலைப்படாதீர்கள்!’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment