இரண்டு ஜென் மாணவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பிறகு தங்களுடைய குருநாதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
‘எங்க குருநாதர் பெரிய மேதை, தெரியுமா?’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு? ஆனா எங்க குருநாதர் மட்டும் அந்த நேரத்துக்குள்ள 30 மணி நேர வேலைகளைச் செஞ்சுடுவார்.’
’அப்படியா?’ ஆச்சர்யமாகக் கேட்டார் இரண்டாவது மாணவர்.
’ஆமா. அவர் தினமும் அவர் தியானம் செய்யும்போதே அன்றைய சொற்பொழிவைப்பத்தி யோசிச்சுடுவார். அப்புறமாக் குளிக்கிற நேரத்தில அன்னிக்குப் பேசவேண்டிய விஷயங்களை என்னென்ன உதாரணங்கள் சொல்லி விளக்கலாம், எப்படி எல்லோருக்கும் புரியவைக்கலாம்ன்னு யோசிச்சுக்குவார். சாப்பிடும்போது அதைத் தனக்குள்ளே பேசிப் பார்த்துப் பயிற்சி எடுத்துடுவார். அப்புறம் வகுப்பு தொடங்கினதும் அப்படியே அருவிமாதிரி தத்துவங்களைக் கொட்டுவார். கேட்கிறவங்களெல்லாம் பிரமிச்சுப் போயிடுவாங்க!’
‘ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் இரண்டாவது மாணவர். ‘எங்க குருநாதரும் பெரிய ஞானிதான். ஆனா உங்க குருநாதர் அளவுக்கு நேரத்தை வளைச்சுப் பிடிக்கிறவர் இல்லை!’
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’
‘எங்க குருநாதர் தியானம் செய்யும்போது அதில மட்டும்தான் கவனம் செலுத்துவார். குளிக்கும்போது நல்லா அழுக்குத் தேய்ச்சுக் குளிப்பார். சாப்பிடும்போது உணவை நல்லா மென்னு ருசிச்சுச் சாப்பிடுவார். வகுப்பு நடத்தும்போது தனக்குத் தெரிஞ்சதைச் சொல்வார். அவ்வளவுதான்!’
இப்போது முதல் மாணவர் பேசினார். ‘நானும் உங்க குருநாதரிடம் சேரவேண்டுமே. உங்களோடு வரலாமா?’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment