Sunday, January 29, 2012

அழுத்தாதே!


தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு சின்னப் பெட்டி.

மாணவர்களின் சத்தம் அடங்கியதும் பேராசியர் அந்தப் பெட்டியைத் திறந்தார். ஒரு பையனை அழைத்தார். ‘இது என்ன? தெரிகிறதா?’

‘மணல்!’

‘உன்னால இதைக் கையில அள்ளமுடியுமா?’

’ஓ, முடியுமே!’ அவன் கை நிறைய மணலை அள்ளிக் காண்பித்தான். மீண்டும் அதைப் பெட்டியிலேயே போட்டான்.

’இப்போ நீ இந்த மணலைக் கையில எடுத்து அழுத்திப் பிடிச்சுக்கோ’ என்றார் பேராசிரியர். ‘ஒரு சின்னத் துளிகூடக் கீழே சிந்தக்கூடாது.’

அந்த இளைஞன் முகத்தில் லேசான பதற்றம். கைப்பிடி மணலை அள்ளி எடுத்து அழுத்தினான். அது அவனது விரல்களுக்கு நடுவே வழிந்து சிதறியது. எல்லோரும் சிரித்தார்கள்.

‘கவலைப்படாதே. மறுபடி முயற்சி பண்ணு!’ என்றார் பேராசிரியர். ‘இந்தமுறை இன்னும் நல்லா அழுத்திப் பாரு’ என்று ஊக்குவித்தார்.

இளைஞன் மீண்டும் மண்ணை அள்ளினான். அதை அழுத்திப் பிடிக்க முயன்றான். அது இன்னும் வேகமாகச் சிதறியது.

இப்போது பேராசிரியர் இன்னொரு மாணவியை அழைத்தார். ‘நீ இந்த மண்ணைக் கீழே சிந்தாம கையில வெச்சிருக்கணும்ன்னா என்ன செய்வே?’

’அழுத்தாம லேசாப் பிடிச்சுக்குவேன் ப்ரொஃபஸர்’ என்றாள் அவள். ‘ஏன்னா நான் அழுத்த அழுத்த மணல் இன்னும் வேகமா வெளியே போகுது!’

‘எக்ஸாக்ட்லி’ என்று புன்னகை செய்தார் ப்ரொஃபஸர். ‘ஜென் வாழ்க்கையோட ஒரு முக்கியமான கோட்பாடு இது. நீங்க ஒரு நெகட்டிவ் விஷயத்தை நினைச்சு மேலும் மேலும் கவலைப்படறபோது உங்களையும் அறியாம அதுக்குக் கூடுதல் ஆற்றலைக் கொடுத்துடறீங்க. அது நிஜமாவே நடந்துடறதுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்திடறீங்க!’

’அதுக்குப் பதிலா மணலை அழுத்தாம பிடிக்கப் பழகுங்க. எதையும் ரிலாக்ஸா அணுகத் தெரிஞ்சுகிட்டோம்ன்னா எந்தக் கவலையும் பெரிய சுமையாத் தோணாது. எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் சுலபமா சந்திச்சுச் சரி பண்ணிடலாம்!’

There is another version of philosophy as well in this. More you take more you loose, if you take less sand in your hand you may not loose any. **Never be greedy**

No comments:

Post a Comment