Sunday, January 29, 2012

சுதந்தரம்

கனகா, மெலிகா என்று இரண்டு தோழிகள். ரொம்ப நாள் கழித்து மீண்டும் சந்தித்தார்கள். பல வருடக் கதைகளைப் பேசியதில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

‘ஏண்டி, இவ்ளோ நேரமாப் பேசிகிட்டிருக்கோம். நீ உன் வீட்டுக்காரரைப்பத்தி எதுவும் சொல்லலையே’ என்றாள் கனகா.

’அவருக்கென்ன? நல்லவர்தான். என்னைத் தங்கத் தட்டில வெச்சுத் தாங்கறார். ஆனா …’

மெலிகா இப்படி இழுத்ததும் கனகாவுக்குக் குறுகுறுப்பு. ‘என்னடி விஷயம்? எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம சொல்லு’ என்று தூண்டினாள். ‘

என் புருஷன் கை நிறையச் சம்பாதிக்கறார். பேங்க் பேலன்ஸ், சொத்துக்கெல்லாம் குறைச்சலே இல்லை. ஆனா அவருக்குத் தாராள மனசுமட்டும் வரவேமாட்டேங்குது’ என்றாள் மெலிகா.

‘எவ்வளவோ பேர் நல்ல விஷயங்களுக்காக உதவி கேட்டு அவர்கிட்டே வர்றாங்க. ஆனா அவர் யாரையும் கண்டுக்காம விரட்டி விட்டுடறார். இதை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு.’

கனகா ஜென் படித்தவள். டோஜன் என்ற ஜென் குருநாதரின் போதனைகளில் இருந்து ஒரு விஷயத்தை மெலிகாவுக்குப் படித்துக் காண்பித்தாள்:

‘அங்கே ஒரு நீல மலை. பக்கத்தில் வெள்ளை மேகம். அந்த நீல மலைதான் தந்தை. வெள்ளை மேகம்தான் மகன். ஒருவரை விட்டு இன்னொருவரைப் பிரித்துப் பார்க்கமுடியாது. அப்படி ஓர் ஆழமான பிணைப்பு அவர்களுக்குள் உண்டு.’ ‘ஆனால் அதேசமயம், நீல மலையோ வெள்ளை மேகமோ அடுத்தவருக்காகத் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. மலையைச் சார்ந்து மேகம் இல்லை, மேகத்தைச் சார்ந்து மலையும் இல்லை. அவை ஒன்றோடொன்று பிணைந்திருந்தாலும் தங்கள் சுதந்தரத்தை விட்டுக்கொடுக்காமலும் வாழ்கின்றன.’

‘இதுக்கும் என்னோட பிரச்னைக்கும் என்னடி சம்பந்தம்?’ புரியாமல் கேட்டாள் மெலிகா.

‘உன் புருஷனுக்குச் சேவை மனப்பான்மை இல்லையேன்னு நீ வருத்தப்படறது நியாயம்தான் மெலிகா. ஆனா அதுக்காக நீ உன்னை மாத்திக்கவேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை. அவரோட மனைவிங்கற முறையில இல்லாட்டியும், ஒரு தனிப்பட்ட மனுஷியா உன்னால முடிஞ்சதைச் சுதந்தரமாச் செஞ்சு பழகு’ என்றாள் கனகா,

‘புருஷன் – பொண்டாட்டி, அப்பா – மகன், மாமியார் – மருமகள், வாத்தியார் – மாணவர், அரசியல்வாதி – தொண்டர்ன்னு எந்த உறவிலயும் ஒருத்தர் மத்தவரைச் சார்ந்து வாழறது தப்பில்லை.

ஆனா அது அவங்களோட சுதந்தரத்தைத் தின்னுடாம பார்த்துக்கணும். அதுதான் முக்கியம்!’

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment