Sunday, January 29, 2012

அறிவுரை...


அப்பா அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா”“இப்பத் தானே அம்மா ஒரு கதை புத்தகத்தைப் படிச்சுக் காமிச்சாங்க. அப்பாவுக்குத் தூக்கம் வருது. தூங்கணும்”

“அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா. ஒரே ஒரு கதை அப்பா”

“இல்லைம்மா. அப்பா பாட்டு பாடறேன். சீக்கிரம் தூங்கு. காலையில எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்”

“ஒரே ஒரு கதைப்பா. ஒன்னே ஒன்னு. ப்ளீஸ். ப்ளீஸ்”

“உழந்தாள் நறுநெய்…”

“ம்ம்ம். கதை வேணும்பா”

“ஓரோ தடா உண்ண…”

“ம். சரி. பாடுங்க”

“உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ணஇழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்முழந்தாள் இருந்தவா காணீரேமுகில் முலையீர் வந்து காணீரே“

“தூங்கிட்டியா அம்மா?”

“தூக்கம் வர்றமாதிரி இருக்கு. ஆனா இன்னும் தூங்கலை”

“சரி. கதை சொல்லவா?”

“கதையா! ம்.ம். சொல்லுங்கப்பா. சொல்லுங்க”

“எந்தக் கதை வேணும்?”

“ம்.ம். கண்ணன் கதை. கண்ணன் கதை”

“ம். அப்பாவும் அதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரி. கண்ணனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்?”

“வெண்ணெய். வெண்ணெய்”

“ஆமாம். வெண்ணெய் தான். ஒரு தடவை அவங்கம்மா..”

“யசோதாவா? தேவகியா?”

“யசோதாம்மா தான். அவங்க ஒரு தடவை ரொம்ப நேரம் வேலை பார்த்து ஒரு பானை நிறைய வெண்ணெய் சேர்த்து வச்சாங்களாம்”

“எம்புட்டு பெரிய பானைப்பா?”

“நம்ம வீட்டுல இட்லி மாவு வப்போமே. அது மாதிரி பெரிய பானை”

“இட்லி மாவு பானையில இருக்காதே. பாத்திரத்துல தானே இருக்கும்”

“ஹிஹி ஆமாம். அந்த மாதிரி பெரிய பானைன்னு சொல்றேன்”

“அப்ப சரி”

“அம்மா அந்தப் பக்கம் போனவுடனே இந்தக் கண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா?”

“தெரியும் தெரியும். அந்தப் பானையில இருக்குற வெண்ணெயை எல்லாம் தின்னுட்டான்”

“உனக்கும் குடுத்தானா என்ன?”

“இல்லை. எனக்குக் குடுக்கலை”

“அப்ப எப்படி உனக்குத் தெரியும்?”

“அப்பா தான் சொன்னீங்க. இன்னொரு கதை சொல்றப்ப”

“ம்.  . ஆமாம். அந்தப் பானையில இருக்குற எல்லா வெண்ணெயையும் அவன் வழிச்சு சாப்டான். கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. அம்மாவுக்கோ கோவமோ கோவம். ஒரு பானை வெண்ணெயை முழுங்குனா என்ன ஆகும்?”

“வயிறு வலிக்கும்”

“ம். அதான். வயிறு வலிக்கும்ல. இந்தத் திருட்டுப்பய அம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்காம பானை வெண்ணெயை முழுங்கியிருக்கான். கண்ணனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு பயம். அடடா நாம எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறானே. இவனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு கோவம் கோவமா வருது”

“ம்”

“அம்மா அந்த கோவத்துல கண்ணனை அடிக்க வர்றாங்க. அம்மா அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடனே கண்ணனுக்கு பயம் வந்திருச்சு. உடனே அழ ஆரம்பிச்சுட்டான்”

“அப்பா”

“என்னம்மா?”

“இனிமே நான் நிறைய சாக்லேட் சாப்ட மாட்டேம்பா”

“இப்ப எதுக்கும்மா சாக்லேட் நினைவு வந்தது?”

“இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க”

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment