Thursday, May 22, 2014

வரம்

இன்று சென்னை வீட்டிற்கு போயிருந்தேன். என் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்: 4 குழந்தை(3மகன், 1மகள்), கணவன் குடிகாரன், போதாக் குறைக்கு வேறு பெண்ணுடன் இருக்கும் சகவாசத்தில் விட்டு விட்டு போயாச்சு. இப்போது இவள் நிலை என்ன?

4 குழந்தை பெறும் வரை தேவைப் பட்ட மனைவி இப்போது ஏன் தேவையில்லை? பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு இப்போது இவள் தலையில் மட்டும்.  எப்படிக் காப்பாற்றுவாள்?

இது கீழ்த்தட்டில் மட்டும் நடக்கும் ப்ரச்சனை அல்ல.

இதுவரை நான் பார்த்ததில் 1/5 பேர் ஏதோ ஒரு விதத்தில் கணவனால் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள்.  படித்த, வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட மனைவியை கை நீட்டி (ஏன் பெல்ட்டால் கூட) அடிக்கும் அவதியை கேட்டிருக்கிறேன்.  நன்கு படித்து, கை நிறைய சம்பளம் வாங்கி என்ன பயன்?

நல்ல கணவனைப் பெற பெண்கள் நிச்சயம் வரம்தான் பெற்றிருக்க வேண்டும்...

"நல்ல கணவன் என்றால் எப்படி விளக்கம் தாங்களேன்" என்ற கேள்வி வந்தது. எனது கண்ணோட்டத்தில், நல்ல கணவனின் குணங்கள் :
1. பெண்ணை பெண்ணாக மதிக்கும் பக்குவம்.
2. திருமணத்துக்கு பிறகு மனைவியின் குடும்பத்திலிருந்து ஏதும் எதிபார்க்காமல் இருப்பது.
3. கடைசி வரை மனைவியை எக்காரணம் கொண்டும் கைவிடாமல் இருப்பது.
4. தன் காலத்துக்கு பிறகும் தன் மனைவி அடுத்தவரின் உதவியை நாடாமல் வாழ்க்கையை நடத்த வழி வகுத்துக் கொடுப்பது.

இன்னும் நிறைய சொல்லலாம்.

ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு நிறைய தியாகங்கள் செய்கிறாள்.
-தன் குடும்பத்தை இழக்கிறாள்.
-தன் விருப்பு/வெறுப்புகளை விடுத்து புகுந்த வீட்டுக்கு ஏற்றார்போல மாறுகிறார்.
-குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களுக்கு ஏற்றார்போல மாறவேண்டும்.

இவ்வளவு செய்தும், கை நீட்டி அடிப்பது, பெண்ணாகக் கூட மதிக்காதது, சேர்ந்து வாழாதது, வெற்றுக் காரணங்களுக்கு விவாகரத்து கோருவது, இன்னும் எத்தனை கொடுமைகள்?

இப்போது சொல்லுங்கள் நல்ல கணவனை அடைய ஒரு பெண் வரம் வாங்கி இருக்கணுமா வேண்டாமா?