Saturday, July 13, 2013

Can you come to Hotel next Thursday night...?

பெரும்பாலும் இந்தியாவில்  Restaurantக்கு Hotel என்றே கூறுவது வழக்கம், ஆனால் மற்ற நாடுகளில் (ஜப்பானிலும்) Hotel என்றால் தங்கும் விடுதி, Restaurant என்றால் உணவகம்.  இந்த முரண்பாடான உபயோகத்தால் விளைந்த வேடிக்கையான குழப்பத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்.

ஒரு சமயம் என் இந்திய நண்பர் இங்கு (டோக்கியோ) வேலை நிமித்தம் வந்திருந்தார்.  எங்கள் அணியில் வழக்கமாக 3 மாதத்துக்கு ஒரு முறை எல்லோரும் இரவு உணவு விருந்துக்கு செல்லும் வழக்கம் இருந்தது.  ஒவ்வொரு முறையும் யாரவது இருவர் அதற்குண்டான ஆயத்தங்களை பொறுப்பேற்பது வழக்கம்.

அந்த முறை நானும் என் நண்பரும் இதை பொறுப்பேற்றோம்.  நான் என் நண்பரிடம் அணியில் ஒவ்வொருவரையும் அவர்களின் விருப்பத்தை கேட்டு வருபவர்களின் பெயர்களை பட்டியல் போடச்சொன்னேன்.  அவரும் சந்தோஷமாக உடனேயே பணியில் இறங்கினார்.

2 நாள் கழித்து நண்பரின் முகம் சிறிது சோர்வாக இருந்தது.  என்ன என்று வினவினேன்.  அதற்கு அவர் எங்களின் சக ஊழியர் ஒருவர் திடீரென சரியாக பேசுவதில்லை என்றும், முகம் பார்த்து சிரிப்பது கூட இல்லை என்றும் வருத்தமாக கூறினார்.  "சரி நான் என்ன என்று கேட்டுச் சொல்கிறேன்" என்றேன்...

அன்று மதிய இடைவேளையில் சந்தித்து கேட்டுவிடலாம் என்ற எண்ணத்துடன் சக ஊழியரிடம் முன் கூட்டியே அனுமதியும் பெற்றேன்.  மதிய இடைவேளை வந்தது, அருகில் இருக்கும் உணவகத்துக்கு (Restaurant) சென்றோம்.  நாங்கள் விருப்பப்பட்ட உணவை வேண்டிவிட்டு, ஜப்பானிய மொழியில் பேசத் தொடங்கினோம்.  என்ன ஆச்சர்யம், நான் பேச்சை ஆரம்பிக்கும் முன் சக ஊழியரே ஆரம்பித்தார்.

சக ஊழியர்: "உங்க நண்பர் எப்படிப் பட்டவர்?" என்றார்.
நான் (ஏன் இப்படிக் கேட்க்கிறார் என்று சற்றே குழப்பமாக): "ஏன்? எனக்கு தெரிந்தவரை ரொம்ப நல்லவர்தான். என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.
சக ஊழியர்: "என்னை அடுத்த வாரம் ஹோட்டலுக்கு வருகிறாயா என்று கேட்க்கிறர், நான் அப்படிப்பட்ட பெண் இல்லை" என்று சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கின.

என்ன நடந்திருக்கும் என்று ஒருவித யூகம் இருந்தாலும் கற்பனை வேண்டாம் என்று எண்ணி நான்: "ஓஹோ!  என்னன்னு கேட்டார், சொல்ல முடியுமா?" என்றேன்.
சக ஊழியர்: "Can you come to Hotel next Thursday night?" என்று சொன்னதும் அழவே ஆர்ம்பித்து விட்டார்.

எனக்கு இப்போது 100% புரிந்து விட்ட நிலையில் பட்டென சிரித்து விட்டேன்.  பிறது அவரின் அழுகையை நிறுத்த சமாதானம் சொல்லி, முதலில் நடந்த குழப்பத்துக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, "அடுத்த வாரம் நம் அணியின் இரவு உணவு விருந்து இருப்பது தெரியும் அல்லவா, நண்பர் அதற்குதான் ஒவ்வொருவரிடமும் அவரவர் விருப்பத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.  இந்தியாவில் Restaurantக்கு பொதுவாகவே Hotel என்றுதான் கூறுவார்கள்.  அவரும் அந்த அர்த்தத்தில்தான் கேட்டார்" என்று புரிய வைத்தேன்.

அலுவலகம் திரும்பும் வழியில் சக ஊழியரின் முகத்தில் ஒரு நிம்மதி இருப்பதை காண முடிந்தது.  நாங்கள் அலுவலகம் திரும்பியதும், சக ஊழியர் நேரே நண்பரின் இருக்கைக்கு சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

நான் நண்பருக்கு நடந்ததை விளக்கினேன்.  பிறது இந்த மாதிரி குழப்பம் உண்டாகும் விதத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க நட்ப்புடன் எச்சரித்தேன்.

இதுபோல இன்னும் நிறைய இதில் இருக்கிறது.